எஸ். ஏ. கப்பார் (காவியன்)
கல்முனைப் பிரதேசத்தில் இருந்து 1974 தொடக்கம் இலக்கியப் பசிக்குத் தீனி போட்ட சஞ்சிகைகளில், 1978 ஆம் ஆண்டு எஸ். ஏ. கப்பார் (காவியன்) அவர்களின் வெண்ணிலா, 1983ஆம் ஆண்டு ஆர். எம். நௌஸாத் (தீரன்) அவர்களின் தூதூ, 1983 ஆம் ஆண்டு எம். சி. ஏ. பரீத் (ஸ்டார் பரீத்) அவர்களின் கோகிலம் ஆகிய மூன்று சஞ்சிகைகளும் மறக்க முடியாத கலை இலக்கிய சஞ்சிகைகளாக அதுவும் அச்சு இதழ்களாக வெளிவந்தன. இந்த மூன்று சஞ்சிகைகளினது ஆசிரியர்கள் மூவரும் ஆரம்பத்தில் கவிஞர்களாகவே உருவெடுத்தனர். பின் மூவரும் சிறுகதை எழுத்தாளர்களாகப் பரிணமித்தனர். ஆர். எம். நௌஸாத் ஒரு படி மேலே சென்று நாவலாசிரியராகவும் இலக்கிய விமர்சகராகவும் திகழ்கிறார்.
இதில் சிறப்பு என்னவென்றால் மூவரும் இன்றுவரை எழுதி வருபவர்கள். இன்றுவரை நண்பர்களாகவே இருப்பவர்கள். எங்கு கண்டாலும் மச்சான் என விழித்துக்கொள்பவர்கள்.
நிற்க, எனது சிறுகதைத் தொகுதியான 'அப்பாவின் டயரி' நூல் பற்றிய நண்பன் ஆர். எம். நௌஸாத் அவர்களின் இந்த சிறப்புப் பார்வை உண்மையில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி.