Saturday, December 23, 2023

ஜே.வஹாப்தீன்

 

ஜே.வஹாப்தீன் -

வெள்ளிவிரல் மின்னுகின்ற தீரன்

வெட்டவெளிக் காற்றினிலே பாரன்
சொல்லினிலே கலைசெய்து
சோக்கான கதைபுனைய
தென்கிழக்கில் இவர்தானே சூரன்.


ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

 

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

தமிழுக்குக் கிட்டியதோர் செல்வமே தீரன் 

அமிழ்தினிய ஆக்கங்கள் செய்வான் – உமிகடைந்த 

நெல்லுக் குவப்பாகும் நற்றமிழின் தேறல்கள் 

வல்லவன் வாழிபல் லாண்டு.

 

ஜிப்ரி ஹாசன்

 

ஜிப்ரி ஹாசன்

 தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன். ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ராகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.

தீரனின் ஒட்டுமொத்தப் படைப்புகள் மீதும் விரிந்த பார்வையை முன்வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் நானும் இருக்கிறேன். தமிழகத்திலுள்ள பல படைப்பாளிகளை விஞ்சி நிற்பவர். இலங்கை என்பதற்காக எத்தனை மூடி மறைப்புகள்.

0

ஜிப்ரி ஹாசன்

தீரனின் ஒட்டுமொத்தப் படைப்புகள் மீதும் விரிந்த பார்வையை முன்வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் நானும் இருக்கிறேன். தமிழகத்திலுள்ள பல படைப்பாளிகளை விஞ்சி நிற்பவர். இலங்கை என்பதற்காக எத்தனை மூடி மறைப்புகள். நாம் இந்த விடயத்தில் இணைந்தே பயணிக்கலாம்.

 

வனம்- மின்னிதழ்

 

மொழி வழி கூடுகை 2022

வனம்- ஆதிரை

விருந்தினர் - 03 தீரன் நௌஷாத்

 

 

தீரன் ஆர். எம். நௌஷாத் கிழக்கின் நிலவியல் குறித்து மிக நேர்த்தியான கதைகளை வாசிப்புலகிற்கு தந்தவர். தனக்கான கதை மொழியினை வடிவமைத்ததிலும், மண்வாசனைச் சொற்களில் பிரத்தியேக கவனத்தினைச் செலுத்தியதும் தீரனின் தனித்த அடையாளமாக இலக்கியப் பரப்பில் விசாலமாகியது. தீரனின் கதைகள் முழுக்க உலாவித்திரிந்த மாந்தர்கள் வாசகர்களிடம் மிக அண்டிய உறவினை பேணிக் கொண்டார்கள். தீரனின் கதைகளைப் போல கவிதைகளும் மேம்பட்ட அரசியலினை கொண்டியங்கியது.

 

வபா பாறூக்

 

வபா பாறூக்


மருதூரின் மனிதம் மிக்க கலைமுகம்
சர்வதேச தமிழ் அடையாளங்களில் ஒன்று
எனது பாடசாலைக்கால நண்பன் வாழ்த்துக்கள்

 

லத்தீபா காரியப்பர்

 

லத்தீபா காரியப்பர்


மண்ணின் வாசனையோடு நகைச்சுவை கலந்த ஆக்கங்களை எழுதும் அற்புதமான எழுத்தாளர் வாழ்த்துகள்

 

ரோஷான் ஏ.ஜிப்ரி

 

ரோஷான் ஏ.ஜிப்ரி


ஆர்.எம்.நௌஸ௱த்( தீரன் சேர்)
அவர்களின் நூல்கள் பற்றி பேசுகிறவர்கள் அவர் எழுதி முஸ்லிம் நாடகங்கள் பற்றி பேசியது குறைவு.
நமது மண்ணுக்கு உரித்தான பேச்சு வழக்கில் நிறைய நாடகங்கள் எழுதி இருக்கிறார்.


முஸ்டீன்

 

முஸ்டீன்

http://simproduction2002.blogspot.com/

 தீரன் என்ற சைலன்ட் டெரர்

 

இலக்கிய உலகம் எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டுவிட்டது.பம்மாத்துக்காட்டிப் பீத்தித் திரியும் பன்னிக் குட்டிகளையும்திருட்டுஆசாமிகளையும்வீர வசனமும் கோட்பாடுகளும் பேசித்திரியும்போதகர்களையும்அவிழ்த்துப்போட்டு நிர்வானமாய் உடலைவர்ணித்து ஆபாசமாய் எழுதிப் புகழ்பெறும் பெண்ணியக்குஞ்சுகளையும்முதுகு சொரிந்தே விரல் தேய்ந்து ஊராப்பட்டவலிசல்களையெல்லாம் ஒன்று திரட்டி பட்டமும் சேலையும் போர்த்திதனிமரமாகும் அச்சத்தில் தோப்பு செய்து குறளி வித்தை காட்டும்வித்துவர்களையும்முகாம் அமைத்து பேத்தைக் குட்டிகள் போலதம்மைப் பெரியவர்களாகக் காட்டும் அற்பர்களையும் அப்பப்பா... இது போல இன்னும் பல.. முடியல .....இது இப்படியே இருக்க,

 

வீரியமிக்க வாசிப்புஆழமான பார்வைதேடிப்படித்தும் போதாமையை உணர்ந்து தம்மைச் சிற்றெறும்பாய் உணர்ந்து காரியமாற்றுகின்றபேரையும் புகழையும் பாராட்டையும் எதிர்பார்க்காமல் அமைதியாகப்படைப்பிலக்கியத்தில் ஆழம் தேடிப் பாய்கின்ற பெரு நதிகளும்தன்பாட்டில் சலசலப்பில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.அவை யாருடைய பார்வையிலும் உருத்திக் கொண்டிருப்பதில்லை.ஓர் அழகிய சித்திரம் போல ஈர்க்கும் தன்மையோடு காலாகாலத்திற்கும் மொனாலிசா மாதிரி நின்று நிலைக்கும்.

 

தீரன் - இது ஒரு புது வகையரா.

 எனக்குத் தீரனை அறிமுகப்படுத்தியதுமுஸ்லிம் குரல் பத்திரிகையில் வெளிவந்த பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் தொடராக வந்த நாவல்தான். அதில் ஒரு அத்தியாயம்கூட மிஸ் ஆகிவிடக்கூடாது என்ற தீவிரத்துடன் நான் படித்துவிட்டுஅதை அப்படியே கிழித்து சேமித்து வைக்கும் அளவுக்கு ஈர்க்கச் செய்தவர் என்.ஏ.தீரன் என்ற ஆர்.எம். நௌசாத்

 

மிக அண்மையில் மீண்டும் ஞானம் சஞ்சிகையில் புத்தளத்தைச் சேர்ந்த பரோபகாரி ஒருவர் எனது ஹராங்குட்டி என்ற சிறுகதைத் தொகுதி மீதானவிமர்சனத்தை சிறுபிள்ளைத் தனமாக முன் வைக்கஅதற்கு நானும்ஒரு பீரங்கி வேட்டுத் தீர்க்கஇன்னும் பலரும் பலதும் எழுதஇப்படியேநான்கு மாதங்களாகிவிட்டது. அந்தத் தடுமல் பற்றி யாராவதுஏதாவது எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதன் பயனாய்விளைந்ததுதான் இவரின் நேரடித் தொடர்பு. அவராகவே பேசிய போதுஅதுவோர் இன்ப அதிர்ச்சிதானே. நாம் முகம் காணாமல்நேசித்த படைப்பாளிகள் நம்மோடு தொடர்புகொள்ளும் போதுஅப்படியொரு பேரின்பத்தை அனுபவிப்பதுவாஸ்தவம்தானே.

இது போல பலரது தொடர்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்த புத்தளத்துப்பரோபகாரிக்கு எனது நன்றிகள்.அறிந்திருப்பதும் அறிமுகமாகிக் கொள்வதும் பின்னர் நண்பராகஉறவாக குடும்பமாக இறுகி உணர்வதும் நடத்தையின்பால் விளையும்நேசத்தின் பிரதிபலிப்புக்களேஅப்படித்தான் என்னைவிட 23 வருடங்கள்மூத்த எனது தந்தையின் வயதையொத்தஆர்.எம்.நௌசாத் அவர்களின் தொடர்பும் எதிர்பார்ப்புகளில்லாத அன்பினால் அடைப்புக்  குறியிடப்பட்டுத்தொடர்கின்றது. 

 

அடெல்ஸ் ஒன்லி  என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் எனச் சிறிதாகப்பொறிக்கப்பட்டு நான்கெழுத்து விளக்கங்களுடனும் கவர்ச்சிப்படத்துடனும் அடிக்கடி ஒட்டப்பட்டுக் கிழிக்கப்படும்கள்ளப்பார்வைகளுக்கு மட்டும் தீனியாகும் நீலப்படப் போஸ்டர்கள் போல,சிலரின்  இலக்கியமும் சில இலக்கியவாதிகளும் தொங்கிக் கொண்டிருக்கும் முகநூல் சுவர்களில் கூட இவர் இன்னும் ஒட்டப்படவில்லை.அபோகலிப்டாஅவதார்ப்ளக்கலர் ஒப் பெரடைஸ் போன்றகருத்தியல்வசூல்தொழிநுட்பப் பிரமாண்டம்அழகியல்ஆகர்சனமிக்கபடங்களுக்கான போஸ்டர்கள் போலும் தரமான படைப்பும்  படைப்பிலக்கியவாதியும்  முகநூல் சுவர்களில் தொங்காமலில்லை.

 

எந்த முகாமுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் பயணித்துக்கொண்டிருப்பவர். இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத்தொகுதியையும் தந்திருப்பவர். சோளப் பொறி போல கொஞ்சோண்டுஎண்ணெய்யில் பொரிந்து ஊதிப் பெருத்து வெண்மை காட்டி பார்வையைக் கவர்ந்துபின்னர் கொஞ்ச நேரத்தில் காற்றேறி ஜவ்வாகி எதற்கும்பிரயோசனப்படாது குப்பைத் தொட்டியைத் தஞ்சமடையும் துரதிஸ்டத்திலிருந்து பல காததூரம் தள்ளியிருந்து தப்பித்து வாழும் ஓர் எளிமையான படைப்பிலக்கியவாதி. யாருடைய சிபாரிசும் பரிந்துரையும் சேர்டிபிகட்டும்இல்லாமலேயே காலச்சுவடு பதிப்பகம் இவரது மூன்று நூல்களைப் பதிப்பித்துஇருக்கின்றது. 

 

காலச்சுவட்டின் பதிப்பு நேர்த்தியும் வாசகர் வட்டமும் கவனம்பெறுபவை. சுந்தர ராமசாமி என்ற ஆளுமைதான் காலச்சுவட்டின்ட்ரேட் முத்திரைதரச் சான்றிதழ் என்பது எனது அவதானம்.சுந்தர ராமசாமியின் நினைவாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில்முதல்பரிசு பெற்றதுதான் நட்டுமை. பல்வேறு போட்டிகளில் பரிச பெற்றசிறுகதைகளின் தொகுப்புதான் வெள்ளிவிரல்இவை வெளிவந்தபின்னர்நௌஸாத்தின் புத்தகங்களை ஏன் பதிப்பித்தீர்கள் என்று கேள்விகேட்டு கண்ணனுக்கு நிச்சயம் இங்கிருந்து கடிதம் போயிருக்கவேண்டும். அல்லது அவரைப் பற்றிக் கண்ணனிடம் தாறுமாறாக மோசமான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் பிரதேச இலக்கியப் பொம்மைகளால் இவை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.அப்படி நடந்ததா இல்லையா என்பதைக் காலச்சுவடு கண்ணன்தான் தெளிவுறுத்த வேண்டும். ஏனெனில் இங்குள்ள சில முக்கிய புள்ளிகளின் இரத்தத்தில் ஊறிப் போய் நாய் வாலைப் போல நிமிர்த்திட முடியாத பண்பு அது. ஆயினும் காலச்சுவடு இதெற்கெல்லாம் ஆட்டம்கண்டுமுடிவெடுக்கும் வக்கற்ற கூனல் நிலையில் இல்லையென்பதும் எனதுஅவதானம். 

 

அண்மையில் கண்ணன் அவர்கள் வருகை தந்த போது பல்வேறுகுழுக்களைச் சந்தித்துவிட்டுச் சென்றதாக அறிந்தேன் நௌஸாதையம் சோலைக் கிளியையும் சந்திக்க அவர் விரும்பியிருக்கக் கூடும்ஆயினும்அது நிறைவேறியிருக்காது என்று நம்புகின்றேன். இதனால்தான் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தொடர்ந்த சந்திப்பில்முக்கால்வாசி என்னைக் கதைக்க வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.விடைபெறும் போது அவரது நட்டுமைவெள்ளிவிரல்,கொல்வதெழுதுதல் 90 ஆகிய மூன்று புத்தகங்களையும்அன்பளிப்புச் செய்தார். அன்றைய பிராயாணத்திலேயேகொல்வதெழுதுதல் 90 நாவலைப்படித்து முடித்துவிட்டேன்அத்துடன் பாதிச் சிறுகதைகளையும் கூட,

 

கொல்வதெழுதுதல்90

 

ஏற்கனவே பள்ளிமுனைக் கிராமத்தின் கதைஎன்ற பெயரில் முஸ்லிம் குரலில்படித்ததற்கும் இப்போது புத்தகமாகப்படித்ததற்கும் நிறைய வேறுபாடுகளைஉணர முடியுமாக இருந்தது. கதையிலும்கூட மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. பார்த்துப்பார்த்துச் செதுக்கிச் சிற்பமாக்கிஇருக்கின்றார் என்பதை முதலிருஅத்தியாயங்களைத் தாண்டும் முன்னரேபுரிந்து கொள்ள முடியுமாக இருந்தது.பள்ளிமுனைக் கிராமத்தின் கதை ஏன்கொல்வதெழுதல்90 ஆக மாறிப் போனது என்று தெரியவில்லைசெழுமைபெற்ற படைப்புக்கு என்ன பெயர்வைத்தால்தான் என்ன!ஆரம்பித்தவுடன் முழுமையாகப் படித்துவிட்டேமூட வைக்கும்எழுத்துக்கள் இப்போதெல்லாம் வெகு குறைவுஅண்மையில் வாசித்த புத்தகக் குவியவில் மனதில் நிற்பது அஷ்ரப் சிஹாப்தீனினஒரு குடம்கண்ணீர் மற்றும் தீர்க்கவர்ணம்சோலைக்கிளியின்பொன்னாலேபுழுதி பறந்த பூமியோகர்ணணின் சேகுவேரா இருந்த வீடு,நாச்சியாதீவு பர்வீனின் பேனாவால் பேசுகின்றேன்ஜின்னாஹ்ஷரிபுத்தீன் மொழிபெயர்த்த அல்லாமா இக்பாலின் ஜவாபேஷிக்வா ஜவாபேசுதாராஜின் மனைவி மகாத்மியம்ஹாமித்அன்சாரியின் எழுச்சியின் சரிதை ஆகியவைகள்தான். இவற்றின்ஈர்ப்பு இன்னும் மனதில் இருக்கிறது. அது போன்றதொரு அலாதிவாசிப்பனுபவத்தை ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல்90உம்வெள்ளிவிரலும் தந்தன. அதிலும் கொல்வதெழுதுதல்90 அலாதி. 

 ஒரு கதையினதோ அல்லது நாவலினதோ வெற்றியில் பங்காற்றும்முக்கிய விடயம் பாத்திரங்கள் மனதில் பதிந்து போவதுபாடசாலைக்காலத்தில் படித்த வைரமுத்துவின் 'வானம் தொட்டுவிடும் தூரம்தான்'நாவலில் வரும் அம்சவள்ளியும் வாஞ்சிநாதனும் இன்னும் மனதில்அப்படியே அதே செழுமையுடன் இருக்கின்றார்கள்.அப்படிப்பட்ட பாத்திரப்படைப்பினை கொல்வதெழுதுதல் 90 இல்முத்து முகமதுவும்மைம்னாவும்தலைவரும்சப்பு சுல்தானும்பெற்றுவிடுகின்றார்கள். 

 

முத்துமுகம்மது மீது நமக்கேற்படும் பரிதாபமும் பிடிப்பும் மைம்னாவின்மீதேற்படும் கழிவிரக்கமும் தலைவர் மீதேற்படும் மரியாதையும்சப்பு சுல்தான் மீதேற்படும் பொல்லாத கோபமும் நாலலைவெற்றியடைச் செய்துவிடுகின்றது. ஊர்ப்பாசை அப்படியேநம்மை அந்த மண்ணுக்குள்ளேயே தள்ளிவிட்டு வேடிக்கைபார்க்கின்றது. தென்னிலங்கைச் சமுகம் அந்தப் பேச்சுவழக்கில்பரிச்சயமற்றுத் தள்ளிநிற்க முயன்றாலும் கதை வளர்ந்து செல்லும்பாங்கு அப்படியே கட்டிப்போட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை.சமுகத்தளத்தில் அப்போது மட்டுமல்ல இப்போதும் புரையோடிப் போய் நின்று மிரட்டிப் பார்க்கும் பல பிரச்சினைகளை இலாவகமாகநகர்த்திச் சென்று ஆங்காங்கே போடப்படும் முடிச்சு அவிழ்க்கப்படும்வரை நமக்குள் பரவும் பரவசத்தின் வேகம் குறைவதில்லை.

 வெள்ளிவிரல்

இது போலவே வெள்ளிவிரல் சிறுகதைத்தொகுதியும்ஒவ்வொரு கதையும் படிக்கத்தூண்டும் சுவையை ரகசியமாகத்தன்னுள் பதுக்கி வைத்திருக்கும் அதிசயத்தைபடிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ளமுடியும். தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதம்தரித்ததுஊர்காவற்படைஅரச ஆயுதப்படைஎன்பவற்றின் பாலும் வெகு இலகுவாகப்பயணித்து மீளும் கதை லாவகம் இவரதுஎழுத்துக்களில் இயல்பாய் ஊடுறுவுகின்றது.அத்துடன் முஸ்லிம் காங்கிரசின் தோற்றம்சிதைவு வக்கற்ற போக்கு ஆகியவற்றிலும்நிலைகுத்தி மீண்டு சுய விமர்சனம்செய்கின்றது. தலைவர் அஸ்ரபின்மரணத்திற்குப் பின்னர் என்னென்னகூத்தெல்லாம் நடந்து முடிந்ததுஎன்பதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உம்மாவாகச்சித்தரித்து நகர்த்தப்பட்டிருக்கும் கதை ஒரு வகையில் வரலாற்றுப்பதிவும் கூட.அதில் சொல்லப்பட்டிருக்கும் பாத்திரங்களின் உண்மைப்பெயர்களைநாம் ஊகித்துக் கொள்வது அவ்வளவு பெரிய கஸ்டமாக இல்லை. 

'தலைவர் வந்திருந்தார்என்ற கதை படிக்கும் போதுஉடனேயேமனதில் தோன்றியவர்அரபு இஸ்லாமிய இலக்கியவாதியான நஜீப்அல்கைலானிதான். அவரது 'உமர் யழ்ஹரு பில் குத்ஸ்என்ற நாவல்மிக முக்கியமானது. 'குத்ஸ்சில் உமர் தோன்றினார்என்றோ'குத்ஸில் உமர் உதித்தார்என்றோ தமிழ்ப்படுத்தலாம். தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவனைத் தட்டியெழுப்புவதுடன் கதைஆரம்பிக்கிறது. யூதர்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருப்பதுபற்றியும் மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்கள் இழந்திருப்பதுபற்றியும் முஸ்லிம் உம்மத்தின் கையாளாகாத் தனத்தையும்பிழவுகளையும் பலவீனங்களையும் அப்படியே சுயவிமர்சனத்திற்குட்படுத்துவதோடு அரபுத் தலைவர்களின் யோக்கியத்தையும்தோலுரித்துக் காட்டும் நாவல் அது. நஜீப் அல்கைலானியின் அரபுநாவலை ஆர்எம்.நௌசாத் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஒரேசிந்தனைப் போக்கு. உலக இஸ்லாமிய உம்மத்தின் மீது நஜீப்;அல்கைலானி கொண்ட தீராக்காதலைஆர்எம் நௌஸாத் தனதுசமுகத்தின் மீதும் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டுதியாகங்களால்செதுக்கப்பட்ட கட்சி மீதும் கொள்வதில் ஆச்சரியமில்லை. உண்மையானகலப்பற்ற கவலை அவ்வாறு ஒத்த சிந்தனைகளை மனிதர்களில்விதைப்பது அதிசயமானதுமல்ல. மரணித்த தலைவர் அஸ்ரப் ஒருபோராளியிடம் வந்திருக்கிறார் அதன் பின்னர் நடைபெற்றமற்றும்நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துச் சித்து விளையாட்டுக்களையும் முஸ்லிம் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் மக்களையும்சேர்த்தே செருப்பால் அடிக்கின்ற மாதிரி ஒரு கதை.  

நல்லதொரு துரோகம் என்ற கதை இன்னுமோர் ஆய்வுக் கதவைத்திறந்து விட்டிருக்கின்றது. ஆயுதம் தரித்த பேரின மற்றும்ஆக்கிரமிப்புச் சக்திகளால் பெண்கள் வன்புணரப்படுவதை எதிர்க்கும்கதை மாந்தர்கள் என்பதுதான் அது. அல் அஸூமத்தின் புறமுதுகுகள் கதையின் இறுதிப்பகுதி இப்படி வருகின்றதுஒரு ஜவான் தனது துப்பாக்கியை கீழே போட்டுவிட்டுக் குப்புறக் கிடந்த அவளின் கையைப் பற்றியிழுத்து அவளை மல்லாக்கக் கிடத்தி...

'டேடேய்...என்று கத்திக் கொண்டே ஓடினான் இவன்அவள்மீது உட்கார்ந்தான் அவன்

'எந்திரிடா ' என்று கத்தினான் இவன். 'அந்த வெளயாட்டுக்கெல்லாம்

போய்றாதீங்க! அது ஒன்ன மட்டும் உட்டுட்டு மத்ததுகள வெளயாடுங்க'

என்று ஒரு பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்படுவதைத்தடுக்கிறான் அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன்

ஆர்.எம்.நௌஸாத்தின் நல்லதொரு துரோகம் கதையின் இறுதிப் பகுதிஅய்யுபைக் கண்ட நிஸ்ஸங்க ஆத்திரம் பொங்க 

-அடோ ஹூத்திக்க புத்தோ... பளயாங்...பளயாங் என்று கத்தினார்.

ஆனால் அய்யுப் சிறுமியைக் காப்பாற்றும் உச்ச வேகத்தில் வர சட்டென எழுந்த நிஸ்ஸங்ககைத் துப்பாக்கியால் சிறுமியின் தலைமீது மிக இரக்கமின்றிச் சுட்டார். கூந்தல் பிய்ந்து தலை வழியாகசிவப்புத்துண்டங்கள் வெளிப்பறந்தன. அதே வேகத்தில் திரும்பி வெறியுடன் ஓடி வந்த அய்யுபை நோக்கி 

-உம்பத் பளையாங் ஹூத்தோவ்...!

என்று கத்திக் கொண்டே கைத் துப்பாக்கியை நீட்...டியசரியாய் அதேகணத்தில்அய்யுப்மின்னல் வேகத்தில் எஸ்எல்ஆரை உயர்த்திஒரேகுறியில்... அந்தத் துரோகத்தைச் செய்து முடித்திருந்தான்.

இங்கு அய்யுப் என்பவன் ஒரு ஊர்காவற்படை வீரன். நிஸ்ஸங்க என்றபொலிஸ் அதிகாரியின் கையாள் போன்ற ஒரு மிகச்சாதாரனமானவன். அதிகாரி  ஒரு தமிழ்ச் சிறுமியை வன்புணர்வதைஅவன் விரும்பவில்லை அதைத் தடுக்க முயல்கின்றான் இறுதியில்தனது அதிகாரியையே சுட்டுக் கொல்கின்றான். 

அல் அஸூமத் கதையில் வரும் கதா பாத்திரமும் அதைத் தடுக்கப் பாய்துஓடுகின்றதுநௌஸாத்தின் பாத்திரமும் அவன் குடிகாரனாகஇருந்தாலும் கூட இந்த விடயத்தைத் தடுக்க பாய்ந்து வருகின்றான்.அதுதான் முக்கியமானது. பல்வேறு ஈழத்துக் கதைகளிலும் இது ஒரு பேசுபொருளாக கதை புணையும் அம்சமாக மாறிப் போகும்அளவுக்கு பெண்கள்சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு கால வரையறை கிடையாது.இந்திய அமைதிப்படையும் அதைச் செய்ததுஇராணுவமும் அதைச்செய்ததுஇயக்கம் உடைந்த போது விடுதலைப் புலிகளும்வெருகலில் அதைச் செய்தார்கள்கருணாவுடன் பிரிந்தவர்களும்அதைச் செய்தார்கள். இப்படி ஒரு தரப்பும் வன்புணர்ச்சி விடயத்தில் சுத்தம்என்று சொல்வதற்கில்லை.

காலவட்டம் கதை மிகவும் வித்தியாசமான புனைவு. ஆச்சரியமிக்ககதையுக்தி. மிக வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார். கதை வளர்த்துச்செல்லப்படும் பாங்கு இன்னும் நம்மை அதிசயிக்க வைக்கிறது. காலச்சுழற்சியில் ஒவ்வொரு நிகழ்வும் அற்புதமாகக் கோக்கப்பட்டுள்ளன.

அது போல மீள்தகவு கதை மனதைக் கனக்கச் செய்கின்றது.நீலாவணிண் போதியோ பொன்னியம்மா என்ற கவிதை ஞாபகத்திற்குவந்து போகின்றது. பிச்சைச் சம்பளத்திற்காக பத்து வருடங்கள் அலைந்துதிரிந்து இறுதியில் பிச்சைச் சம்பளம் கிடைக்கும் போது பொன்னியம்மாசெத்துப் போயினாள். அது போலவே இந்த ஏழையும் இழப்பீடுபெறுவதற்காக அலைவது. ஆயினும் நிறைந்த அரசியல்விவகாரங்களை அடுக்கடுக்காகச் செருகிச் செல்கின்றார். தமிழ்அதிகாரிகளிடமும் சிங்கள அதிகாரிகளிடமும் சிக்கித் தவிக்கும்விசயம் தெரியாத முகம்மது யூசுப் அப்துல்லாவின் பரிதாபம் மனதில்சோகத்தை விதைத்துவிடுகின்றது.  இந்தக் கதையை நேரடியாக ஒருகுறும்படமாக்கவுள்ளேன். இந்தக் கதையை வைத்து இந்தியசினமாப் பானியில் ஒரு சீர்திருத்த ஹீரோவைக் கொண்டு முழுநீளத்திரைப்படமாகவே ஆக்க முடியும். அவ்வளவு விசயம் புதைந்துகிடக்கிறது அதற்குள். பாவம் பொதுமகன்.

 ஸீனத்தும்மா கதையின் முக்கிய நிகழ்விலிருந்துதான் எனதுஇரத்தக்குளியல் எனும் நாவல் பிதுங்குகின்றது. ஸீனத்தும்மாவில்ஆக்ரோசமாகத் தொனிக்கும் அதே விடயங்கள் கொஞ்சம் வேறுபட்டவார்த்தைகளில் இரத்தக் குளியல் நாவலிலும் தொனிக்கிறது. இப்படிப்பட்ட பெண்கள் மீது நௌஸாத்தும் நானும் கொண்டிருக்கும் நிலைப்பாடுஒன்றுதான் என்பதற்கு இது நல்ல சான்று. நௌஸாத்தின் ஸீனத்தும்மாஇரத்தக் குளியலில் வரும் எனது ஹூதா ஆகிய இரண்டு பாத்திரங்களும் விபச்சாரக் குற்றச் சாட்டில் கொல்லப்படுதல் என்பதுதான் விடயம். பின்னாட்களில் வரும் ஓர் ஆய்வாளன் ஸீனத்தும்hவின் கருவில்இருந்துதான் இரத்தக் குளியல் பிறந்தது என்று சொன்னாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியொரு ஒற்றுமை. ஸீனத்தும்மாபிறந்தது 1989ல் இரத்தக்குளியல் பிறந்தது 2011ல் ஆக மொத்தத்தில் சும்மா இருக்கும் வாய்க்கு அவள் கிடைத்தமாதிரி. 

நாட்டுப்புறப் பரிசாரிகள் மீதான குருட்டு நம்பிக்கைதான் இன்னும்அவர்களை ஜாம்பவான்களாக வைத்திருக்கின்றது. பாலியல்மன்னர்களாக அவர்கள் திகழ்வதற்கு மக்கள்தான் வழிவகுக்கின்றார்கள்.இந்தியாவில் மலிந்திருக்கும் போலிச் சாமியார்களுக்கும் நமது பரிகாரிமார்களுக்கும் பெரிதாக இந்த விடயத்தில் வித்தியாசம் கிடையாது.அன்மையில் பரிகாரிமாரிடம் சிக்கிக் கொள்ளும் நிகழ்வினைமையப்படுத்தி ஒரு நீண்ட கவிதையை பொத்துவில் கிராமத்தான்கலீபா வகவக் கவியரங்கில் வாசித்திருந்தார். கிழக்கு மாகாணப்பரிகாரிகள் மட்டுமல்ல நாடு முழுவதுமுள்ள எல்லாப் பரிகாரிமார்களுக்கும் ப்ரேமானந்தாசங்கராச்சாரியார்நித்தியானந்தாஎன இது போன்ற எல்லா வகையறாக்களும் செய்யும்சில்மிசம்தான் வெள்ளிவிரல் பரிகாரியும் செய்கின்றார். இதன்பின்னரும் பெண்களைக் கூட்டிக் கொண்டு பரிகாரிமாரிடம் போவீர்களாஎன்று கேள்வி கேட்பது போல ஓர் எள்ளளுடன் கதை முடிகின்றதுஅழகு. நமது தாய்மாருக்குப் பாசம் இருக்குமளவுக்குப் புத்தி கிடையாது.

 

நட்டுமை 

 

இந்த நாவல் பற்றி நான் அதிகம் எழுதத்தேவையில்லை. பேராசிரியர்எம்.ஏ. நுஃமான் அவர்கள்நான் சொல்லநினைத்த அத்தனையையும்அச்சசொட்டாக அப்படியேசொல்லி முடித்திருக்கிறார். நீண்டமுன்னுரையைக் கண்ணுற்றதும்அதைப் படிப்பதைத் தவிர்த்துக்கொண்டு நாவலை வாசித்துமுடித்துவிட்டுத்தானபடித்தேன்.எப்போதும்அனைத்து உரைகளையும் படித்துவிட்டுத்தான்விடயத்திற்கே செல்வது எனது வழக்கம்.சோலைக் கிளியின்பொன்னாலே புழுதி பறந்த பூமிக்கு கலாநிதிறமீஸ் அப்துல்லாவழங்கியிருந்த நீண்ட முன்னுரை அயர்ச்சியாக்கியதுபோலஇதிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் நட்டுமையில்பேராசிரியரின் குறிப்பை முதலில் படிப்பதைத் தவிர்த்தேன்.ஆயினும் கடைசியில் வாசித்ததன் சாதகத்தை முழுமனதோடுஏற்கின்றேன். நட்டுமை குறித்து நான் ஏதேனும் எழுதுவதானால்பேராசிரியன் எழுத்துக்களை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணினால் சரி. ஆகவே எதற்கு வீண் வம்புஎல்லோரும் பேராசிரியரின்குறிப்பைப் படியுங்கள்அதன் பின்னர் நாவலைப் படியுங்கள்,

1930 களில் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்து முஸ்லிம்கிராமமொன்றில் வாழும் சுகானுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

 

நௌஸாத் ஆகிய தீரன் என்ற சைலன்ட் டெரரின் 

அடுத்த படைப்புக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். 

இப்படி அடுத்த படைப்பை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும்

 படைப்பாளிகள் நம்மிடம் வெகு குறைவு

 என்பதை மனதிற் கொண்டுஅவசரமாக செயற்படுங்கள்.

௦௦

 

மீலாத் கீரன்

 


மீலாத் கீரன் 

தீரன் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவர், அவரது மொழியாம் கை அபாரமானது 

மருதநிலா நியாஸ்

 

மருதநிலா நியாஸ்

 சமூகம் சார்ந்த யதார்த்த விடயங்களைத் தத்ரூபமாகப் படம்பிடித்து கண்முன்னே காட்சிகளாகத் தரும் எழுத்தாற்றல் மிக்க எழுத்தாளர் ஆர்.எம்..நௌஷாத்

 

மஹதி ஹசன் இப்ராஹீம்

 

மஹதி ஹசன் இப்ராஹீம்


அற்புதமான எழுத்தாளர்! நகைச்சுவை உணர்வு மிக்கவர்!இவரை நேரில் சந்திக்காதபோதும் நண்பராய் அடைந்தது என் பாக்கியம்!

 

 

பிஸ்தாமி அஹமட்

 

பிஸ்தாமி அஹமட்....

சாகித்திய விருது பெற்ற வெள்ளி விரலால் மட்டுமே எனக்குள் தங்க நினைவுகளைத்தந்த கிழக்கிழங்கையின் சிறந்த நாவலாசிரியர்களுள்ஒருவரான தீரன் R.M. Nowsaath அவர்களது முக்கிய ஐந்து நூல்கள் இவை தீரன் எல்லோரையும் போன்ற எழுத்துக்களைக்கொண்டவரல்ல.அவரது எழுத்துகளில்உயிர் உள்ளதுஉயிர்ப்பும் உயிரோட்டமும் உள்ளதுஉணர்வுள்ளது

இனசௌஜன்யத்தை பேசும் உறவுப்பாலமாக அவை உள்ளன ஆயிரம் உரைகளால் உபன்னியாசங்களால் ஆக்க முடியாததை அவர் ஒருகதைக்கூடாக ஆக்கிவிடுவார்அவரது எழுத்துக்களைமக்கள் மயப்படுத்துவதால்சகவாழ்வைஇன சௌஜன்யத்தைஅமைதியைநல்லுறவைவளர்க்கலாம்இனங்களுக்கிடையிலானநல்லுறவுக்கானகலந்துரையாடல்களாகஆக்கலாம்எழுத்தின் வலிமையைஉணர்த்தலாம்எழுதப்படாமல் விடுபட்டவற்றை குறைநிரப்பு செய்யலாம்அவரது கதைகளின்கரு பாத்திரம்சூழல்மொழி என அத்தனையும்உயர்ந்தவைஉன்னிப்பாக அவதானிக்க வேண்டியவைவரலாற்றின் தவறுகளைவிடுபடல்களைவிபரீதங்களைவிளைவுகளைமொழிவழியாகஇலக்கியம் வழியாகஎவ்வளவு சிறப்பாகபகிரலாம் பதியலாம் என்பதற்கு தீரனின் எழுத்தும் சிறந்த சான்று

தீரன் நௌஸாத் இலக்கிய உலகில் மட்டுமன்றி ஈழத்திலும் தவிர்க்க முடியாத தன்னிகரற்ற நாமம் தீரன் எழுதிதித்தீர்க்கஒரு மந்திரக்கோல்மந்திர மொழிமந்திர பாத்திரங்கள்அவர்முன்னே புதிது புதிதாக குவிந்து கிடக்கின்றன

 

பியாஸ் முகம்மது

 

பியாஸ் முகம்மது

இவரின் எழுத்து ஒரு வித்தியாசமானவை யாரையும் குறை கூறி இருக்கமாட்டார் தனது பாணியிலே இன்னமும் எழுதுகிறார். நல்லா பழகக் கூடியவர் .இவரின் எழுத்துக்கு மூ. மேத்தாவே விமர்சனம் செய்யப்பட்டவர் வாழ்த்துக்கள் அருமை நண்பர் நௌசாத்.

 

 

பாவேந்தல் பாலமுனை பாறூக்

 

பாவேந்தல் பாலமுனை பாறூக்

மண் மணக்கும் நாவல்களின் ஆசிரியர்.புகவம் அமைப்பின் மூலம் இலக்கியப் பணி புரிந்தவர். காத்திரமான சிறுகதைகளால் மக்கள் மனங்களை வென்ற சிறுகதையாளன்.குறும்பாக்காரர்.புகவத்தினால் பட்டம் தந்து என்னையும் கௌரவித்தவர்.நல்லமனம் வாழ்க!

தங்குதடை யின்றித் தனது படைப்புகளில் அங்கதத்தைக் கொண்டுவரும் ஆற்றலது-இங்கிந்தத்  தீரன் நவுசாத்தை மேலும் சிறப்பிக்கும் பேரெடுப்பார் இன்னும் அவர்!

0

 

பாவேந்தல் பாலமுனை பாறூக்

தீரனின் நேர்காணல் அருமை.அதிகம் அலட்டிக்கொள்ளாத எளிமையான போக்குடைய சிறந்த நாவலாசிரியர்.படைப்பிலக்கியங்களுக்கு பரிசுகள் பல வென்ற கவிஞர்.

பட்டங்கள் விருதுகள் விழாக்கள் என்று ஆள்பிடித்து அலைபவரல்ல அவர்.

இறப்புக்குப் பின்னரான எழுத்தாளனின் விருதுகள் பரிசுகள் பற்றிய அவரின் கருத்து யதார்த்த்தமானது.

0

பாவேந்தல் பாலமுனை பாறூக்

இலக்கியத்தில் ஜொலிககின்ற பேரன்

இவரேதான் பன்னூலான் தீரன்

கலக்குகிறார் நாவல்களில்

கவிதைகளில் சிறுகதையில்

எடுத்தவரின் நூல்களினைப் பாரன்!

0

பாவேந்தல் பாலமுனை பாறூக்

 

 

தமிழன் ஞாயிறு (26-02-2023) இதழின்  தமிழ்முரசு பக்கங்களில் தீரன் ஆர்.எம். நௌசாத் குறித்து நானெழுதிய குறிப்பு ஆளுமைகளின் அடையாளமாக இடம் பெற்றுள்ளளது. முகநூல் நண்பர்களுக்காக  இங்கே அப்பக்கங்கள் பதிவு பெறுகின்றன. நன்றி:-தமிழ்முரசு ஆசிரியர் ஜீவா சதாசிவம்

 

ஆளுமைகளின் அடையாளம்- 22

------------------------------------------------------------

மண்வாசனைப் படைப்புகளால் மக்களை ஈர்த்த  தீரன் ஆர்.எம். நௌசாத்.

-----------------------------

"பேரண்டத்தை வாசிக்கச் செல்லும்

ஒரு பறவை

பெரு வனத்தில் எங்கோ வீழும்

ஒருசிறு சருகு

 

அந்தப் பறவைக்கும்

ஒரு பாடல் இருக்கும்

அந்தச் சருகும்

ஒரு சரித்திரம் சொல்லும்"

 

(முத்திரையிடப்பட்ட மது -2021)

 

  இலக்கிய வானில்  இறக்கை விரித்துப் பறக்கும்  பறவை-ஆர்.எம். நௌசாத்,  பாடும் கவிதை அது.

ஆர் எம் நௌசாத்,

ஆரப்பட்டமில்லாமல் அமைதியாக இருந்து  கனதியான ஆக்கங்களைத் தரும் படைப்பாளி,

படிமச்சிறப்போடு, சித்திரச் சிறைப்பிடிப்பாய்   உள்மனதைச் செப்பனிடும் உணர்வூற்றாய்க் கவிபடைக்கும் கவிஜோதி,

மண்வாசனை ததும்பும்  புனைவிலக்கியங்களை, கலைத்துவ நேர்த்தியோடு  தரும் கலைச்சிற்பி..,

ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில்   பெரும்பங்கு வகிக்கும் கல்முனைப் பிரதேச இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராக நாவல்,சிறுகதை,கவிதை ,பத்தி எழுத்து,சஞ்சிகை வெளியீடு என்பவற்றில் தடம் பதித்து வரும் முக்கிய  எழுத்தாளன்.

கல்முனைப் பிரதேசத்திலிருந்து  1970-1980 காலப் பகுதிக்குள் எழுத்துலகிற்கு வந்தவர்களில் ,ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைப் போக்கில்  நாவல்கள் மூன்றைத் தந்திருப்பவராக இலக்கிய உலகில் அடையாளம் பெற்றிருப்பவர்,தனது படைப்புகளுக்காக நாடு கடந்தும் பலபரிசுகளை வென்றவராகப் பெயர் பதித்திருப்பவர்,  கவிதைச் சிற்றிதழொன்றைப்    புகவம் வெளியீடாக தந்ததன் மூலம்   குறும்பா ,ஹைக்கூ போன்ற  கவிதையின் புது வடிவங்களை  எண்பதுகளில் இருந்தே இளைய தலைமுறைப் படைப்பாளர்களுக்கு அறிமுகப் படுத்தியவர் என்று  ஆய்வாளர்களால் எடுத்துரைக்கப்படுபவர் ஆர்எம். நௌசாத்.

  தீரன் என்ற புனை பெயரிலும் இயங்கும் அவர், புகவம் (புதுமைக் கவிஞர் வட்டம்) என்ற அமைப்பின் செயலாளராகவும், அபாபீல்கள் கவிதை வட்டத்தின் செயற்பாட்டு முதல்வராகவும்  கலை இலக்கியப் பணிபுரிபவர்.

அவருடைய படைப்புக்கள்  வாசகர்களாலும் விமர்சகர்களாலும் விதந்துரைக்கப் பட்டிருக்கின்றன.

 " கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்கைக் கையாள்வதில் ஆசிரியர் மிகுந்த கவனம் செலுத்தி யிருக்கிறார்.நாவலுக்கு இந்த மொழி ஒரு புதிய வலுவைக் கொடுக்கிறது. சமூகக் கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த பார்வையைத் தராவிட்டாலும் ஒரு புதிய வாழ்க்கைப் புலத்தை தமிழ் நாவலுக்கு அறிமுகப் படுத்துவதன் மூலம் தன்முக்கியத்துவத்தை இந் நாவல் நிலை நாட்டிக் கொள்கிறது" என்று 'நட்டுமை' என்ற நூலுக்கு வழங்கியுள்ள  அணிந்துரையில் பேராசிரியர் எம். . நுஃமானும்

 

"வெளிப்பாட்டுத் திறன் மிக்க கதைஞர்..கலைத்துவம் கொண்டவர்.கதைகளின் கலாசாரப் பின்புலத்தை நன்கு கொண்டுவருபவர்" என்று ஈழத்தின்

 பிரபலம் பெற்ற கதை சொல்லி திக்குவல்லைக் கமாலும்,

 "தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன் ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.

தமிழகத்திலுள்ள பல படைப்பாளிகளை விஞ்சி நிற்பவர்" என்று இலக்கியத் திறனாய்வாளர் ஜிப்ரி ஹாசனும்,..

"தீரன் நெளசாத் நமது சிறுகதையை உயிர்ப்பான திசைக்கு மாற்றிய வல்லவர். அவரை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். காலச்சுவடு மூலம் தமிழக வாசகர் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒரே படைப்பாளி அவரே!" என்று நம் மண்ணின் செய்நேர்த்தி மிக்க  கதைஞர் எஸ் எல் எம் ஹனிபாவும்,

"தமிழுக்குக் கிட்டியதோர் செல்வமே தீரன்

அமிழ்தினிய ஆக்கங்கள் செய்வான் உமிகடைந்த

நெல்லுக் குவப்பாகும் நற்றமிழின் தேறல்கள்

வல்லவன் வாழிபல் லாண்டு!" என்று காப்பியக் கோ ஜின்னா ஷரிபுத்தீனும் ,

"தீரன் எம்மிடையே வாழும் தீராத கதைசொல்லி. அநாயாசமாய் கதைசொல்லும் தீரனின் கதைகளில் உள்ளுறையாய் ஔிந்திருக்கும் அங்கதம் நம்மை வாழ்வின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இழுத்துச் செல்லும்".என்று விரிவுரையளர் எம் அப்துல் றசாக்கும்  குறிப்பிடுவர்.

 இலக்கிய உலகில் வரவேற்புப் பெற்ற சிறந்த  நூல்களையும், சஞ்சிகைகளையும்,இறுவெட்டுக்களையும் வெளியீடு செய்திருப்பவர்   அவர்.

 

1. தூது- கவியேடு - 1983

 

கையடக்கக் கவிதைச் சிற்றேடு

16 இதழ்கள். கல்முனைப் புகவம் வெளியீடு

 

2. வல்லமை தாராயோ - சிறுகதைத் தொகுதி - 2000

கல்முனை புகவம் வெளியீடு

 

3. நட்டுமை - நாவல் - 2009

காலச்சுவடு வெளியீடு

 

4. வெள்ளிவிரல் - சிறுகதைத் தொகுதி-

காலச்சுவடு வெளியீடு

 

5. கொல்வதெழுதுதல் 90 - நாவல் - 2013

(2013க்கான தமிழ்நாடு அரசின் 1000 பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது.)

காலச்சுவடு வெளியீடு

 

6. அபாயா என் கறுப்பு வானம் - கவிதைகள் - மின்நூல் - 2015.

பிரதிலிபி வெளியீடு

 

7. ஆழித்தாயே அழித்தாயே - சுனாமி காவியம் - 2017

அபாபீல்கள் கவிதா வட்ட வெளியீடு

 

8. குறு நெல் - குறும்பாக்கள் - 2017

பாவலர் பண்ணை வெளியீடு

 

9. தீரதம் - சிறுகதைத் தொகுதி - 2017

ஜீவநதி வெளியீடு

 

10. வக்காத்துக்குளம் - குறுநாவல் - 2021

ஏறாவூர் கசல் பதிப்பக வெளியீடு.

 

11. முத்திரையிடப்பட்ட மது - கவிதைகள் - 2021 -

அபாபீல்கள் கவிதா வட்ட வெளியீடு.

 

 பத்தித் தொடர்கள்

 

வானவில்லே ஒரு கவிதை கேளு - குறுநாவல் - 2005 - ஈழநாதம் - வார இதழ்

 

ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது - பாவலர் பஸீல் காரியப்பரின் படைப்புலகில்

சஞ்சரித்தல் - 2009 - விடிவெள்ளி வார இதழ்.

 

விழித்திரையில் விரியும் வெண்திரை-ஆங்கிலத் திரைப்படப் பார்வை - 2009 - நல்லுறவு.

 

இறுவெட்டு

 

காகித உறவுகள்.

 

இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான 12 வானொலி நாடகங்களின் (1987-1989)தொகுப்பு.

 

 (பிரான்ஸ் தமிழ் ஒலிபரப்பு நிறுவனமும் தினக்குரல் பத்திரிகையும்  இணைந்து நடத்திய அகில உலக வானொலி நாடகப் போட்டியில் 3ஆவது பரிசுபெற்ற காகித உறவுகள்

என்னும் நாடகமும் முஸ்லீம் சேவையில் சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பப்படட ஒரு

கிராமத்தின் கவிதை என்ற நாடகமும் உள்ளடங்கியது.)

 

 இலக்கியப் பணிக்காக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருப்பவர் அவர்.

 

தீண்டத்தகாத கரங்கள் ." என்ற முதல் சிறுகதை, 1977 இல் மித்திரன் வாரமலர் நடத்திய பாரதி நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது

 

"நல்லதொரு துரோகம்" என்ற சிறுகதை பேராதனைப் பல்கலைக் கழக சங்கீத நாட்டிய சங்கத்தின் முதற் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றது.

 

'நட்டுமை' நாவல் 2009 இல் தமிழ்நாடு காலச்சுவடு சுந்தர ராமசாமி 75 பவளவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது.[2009]

 

'வக்காத்துக் குளம்' நாவல் அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு குறுநாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. 2014

 

'வெள்ளிவிரல்' சிறுகதைத் தொகுதி 2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் பெற்றது.

 

'சாகும் தலம்'சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது.

 

'தாய் மொழி' சிறுகதை ஞானம் மாசிகை நடத்திய புலோலியூர் . சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றது.

 

அம்பாரை மாவட்டம், சாய்ந்த மருதூரில் ரஸாக் காரியப்பர்-  ஹாஜறா தம்பதியின் மகனாக 1960ல் பிறந்தவர் ஆர். எம்.நௌசாத்.  பாத்திமா றிபாயா அவரின் மனைவி. மூன்று பிள்ளைகளின் தந்தை. அஞ்சல் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

 

இலக்கிய  வாழ்வில்  45 வருடமாக இயங்கி வருபவர் ஆர்.எம். நௌசாத் . அவருடைய பல படைப்புக்கள் இந்தியப் பதிப்புக்களாக வெளிவந்துள்ளன. அவை மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு பரவலாக்கப்படவேண்டும்.  தேகநலத்தோடு இன்னும் பல்லாண்டு காலம்  அவர் வாழ்ந்து இலக்கியப் பொன்விழா,பவள விழா என்று  தொடர்ந்து விழாக்கள் பல  கண்டு,அவர் மகிழ வேண்டுமென்பதே தமது அவாவாகும்.